அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள், முதற்கட்டத்தை விடவும் மிகவும் சவாலானதாகவும் கடினமானதாகவும் இருக்கும் என சீனா எச்சரித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தாருடன் (Ishaq Dar) நடத்திய கலந்துரையாடலின் போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“வாஷிங்டன் மற்றும் தஹ்ரான் (ஈரான்) இடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தைகளுடன் ஒப்பிடுகையில், இதன் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தைகள் மிகவும் கடினமானதாக இருக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடிகிறது. எனவே, இரு நாடுகளுக்கும் இடையிலான இப்பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவளிப்பதில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை (UNSC) இன்னும் கூடுதலான மற்றும் முக்கியமான பங்களிப்பை வழங்க வேண்டும்” என சீனா வலியுறுத்தியுள்ளது.
மேலும், தற்போதைய உடன்பாடுகள் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, “தற்போது எட்டப்பட்டுள்ள ஒருமித்த கருத்துக்கள் (Consensus) இறுதி இலக்கு அல்ல; மாறாக அதுவொரு புதிய ஆரம்பப் புள்ளியே ஆகும். மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் இன்னும் தொடர்ச்சியான முயற்சிகள் தேவைப்படுகின்றன” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
