” ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அரசமைப்பின் பிரகாரமே செயற்படுகின்றார். புதிய அமைச்சரவை அடுத்தவாரம் நியமிக்கப்படும்.” – என்று இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் எதிரணியால் நேற்று முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, தாங்கள் சபையில் இருக்கும் நேரத்தில் அல்லாமல், இல்லாத நேரத்தில் திருட்டுத்தனமாக நாடாளுமன்றம் வந்து சென்றுள்ளார் என எதிரணி எம்.பிக்கள் தெரிவித்தனர். இது உண்மை அல்ல, ஜனாதிபதி வருகின்றார் என தெரிந்து, அவருக்கு முகங்கொடுக்க முடியாமல் இவர்கள் (எதிரணி எம்.பிக்கள் ) ஒளிந்துவிட்டனர்.
ஜனாதிபதி அரசமைப்பின் பிரகாரம் செயற்படுகின்றார். அவர் பதவி விலக வேண்டியதில்லை. முடிந்தால் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கூறிவிட்டுதான், அமைச்சரவை பதவி துறந்துள்ளது. எதிரணியிடம் எந்த எண்ணிக்கை இல்லை.
இராஜாங்க அமைச்சர்கள் அமைச்சுகளுக்கு சென்று பணிகளை முன்னெடுக்கின்றனர். அடுத்தவாரம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும். ” – என்றார்.
