நுவரெலியா, உடப்புசல்லாவ பிரதான வீதியில் ஹாவாஎலிய பகுதியில் இயங்கிவரும் தனியார் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் வருடாந்தம் ஏப்ரல் மாதம் தமக்கு வழங்கப்படும் போனஸ் கொடுப்பனவை முழுமையாக வழங்குமாறு வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்படி ஆடைத்தொழிற்சாலையில் 900 இற்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர். முதல்நாளன்று, தொழிற்சாலையின் உள் நுழைவாயில் மூடப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இரண்டாவது நாள் முதல் பிரதான வீதியோரத்தில் இருந்து பதாதைகளை தாங்கி, கோஷங்களை எழுப்பியவாறு போராடிவருகின்றனர்.
“ ஆடைத்தொழிற்சாலையில் தொடர்ச்சியாக போனஸ் கொடுப்பனவு வழங்கப்பட்டுவந்தது. கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியில் மாத்திரம் வழங்கப்படவில்லை. இவ்வருடம் ஆரம்பத்தில் தொழில் செய்யும் போது அனைவருக்கும் முழுமையான போனஸ் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. எனினும், இன்னும் போனஸ் வழங்கப்படவில்லை. சம்பளமும் கிடைக்கப்பெறவில்லை.” – என்று போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
“ நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. வாழ்க்கைச் செலவும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தொழிற்சாலையில் வழங்கப்படும் சம்பளமும் போதுமானதாக இல்லை.” – எனவும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டினர்.
தொழிற்சாலை ஊடாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் இலவச போக்குவரத்து வசதிகள் இன்று இரத்து செய்யப்பட்டுள்ளது எனவும், தொழிற்சாலை மூடப்பட்டு முகாமைத்துவத்தில் உயர் பதவி வகிக்கும் அனைவரும் தொழிற்சாலை விட்டு வெளியேறி உள்ளனர் எனவும் தெரிவித்தனர்.
“ நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக, ஆடை தொழிற்சாலைக்கு கிடைத்துள்ள ஓடர்கள் குறைவாகும். ஆகையால், வருடாந்தம் வழங்கப்படும் போனஸ் தொகையை இம்முறை வழங்கமுடியாது. எனினும், தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஊழியர் ஒருவருக்கு வழங்கப்படும் கொடுப்பனவில் 50 வீதத்தை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.” என்று தொழிற்சாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்திலும், தொழில் திணைக்களத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆ.ரமேஷ், நானுஓயா நிருபர்
