நல்லாட்சிக் காலத்தின்போது, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சிறிய தொகையையேனும் சம்பள அதிகரிப்பாகப் பெற்றுக்கொடுக்க முடியாமல் போனது. ஆனால் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இது விடயத்தில் நேர்மையாகப் போராடிப் பெற்றுக்கொடுத்துள்ளது என, காங்கிரஸின் உப தலைவரும் பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, இந்தச் சம்பள அதிகரிப்பைப் பெற்றுக்கொடுப்பது சற்று தாமதமானாலும், கொடுத்த வாக்குறுதிப்படி, சம்பள அதிகரிப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகமான சௌமிய பவனில் இன்று (05) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,
“ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதனைத் தடுத்து நிறுத்த நீதிமன்றம் வரை பெருந்தோட்டக் கம்பனிகள் சென்றிருந்தாலும், அந்தச் சம்பள அதிகரிப்பை வழங்குவது தொடர்பான நியாயங்களை சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் எடுத்துரைத்து, இறுதி செய்யப்பட்ட சம்பள அதிகரிப்பை, நீதிமன்ற அனுமதியுடன் பெற்றுக்கொடுத்திருக்கிறோம்” என்றார்.
“அந்த வகையில், பிறக்கவுள்ள சித்திரைப் புத்தாண்டை, இந்த ஆயிரம் ரூபாய் நாள் சம்பள அதிகரிப்புடன் கொண்டாட, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று, செந்தில் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.










