‘ரி – 20’ 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அணி சார்பில் அதிகப்படியாக விராட் கோலி 64 ஓட்டங்களையும், கே.எல்.ராகுல் 50 ஓட்டங்களையும், சூர்யகுமார் யாதவ் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் பங்களாதேஷ் அணியின் ஹசான் மக்மூத் 47 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், ஷகிப் அல் ஹசன் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
அத்துடன், இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 6 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், 185 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பங்களாதேஷ் அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது.
அந்த அணி 7 ஓவர்கள் நிறைவில் 66 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.
இதனால் டக்வத் லூயிஸ் முறைமைக்கு அமைய போட்டி 16 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.
இதனடிப்படையில், பங்களாதேஷ் அணிக்கு 151 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 16 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியைத் தழுவியது.
பங்களாதேஷ் அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லிட்டன் தாஸ் 60 ஓட்டங்களையும், நஜ்முல் ஹொசைன் சாண்டோ 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
துடுப்பாட்டத்தில் சோபிக்கத் தவறிய பங்களாதேஷ் அணியின் ஏனைய வீரர்கள் 20 க்கும் குறைந்த ஓட்டங்களையே பெற்றனர்.
பந்து வீச்சில் இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், ஹர்திக் பாண்டியா 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
அத்துடன், இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 4 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டன.










