உலக வங்கியின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள இரண்டு பிரதான செயற்றிட்டங்களின் நடைமுறைப்படுத்தல் மற்றும் அதற்கான கால அட்டவணை தொடர்பில் ஆராயும் விசேட சந்திப்பொன்று, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான குழுவினருக்கும் உலக வங்கிப் பிரதிநிதிகளுக்கும் இடையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று புதன்கிழமை (24.06.2026) மாலை நடைபெற்றது.
உலக வங்கியின் நிதியுதவியுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ‘றிவைவ்’ (REVIVE – Regional Empowerment through Vibrant, Inclusive, and Viable Economies) திட்டத்தின் கீழ், வடக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக யாழ்ப்பாணத்தில் உள்ள குருநகர் இறங்குதுறை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணக் கோட்டை ஆகிய இரு இடங்களையும் மையப்படுத்திய ஒருங்கிணைந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
நேற்றைய இச்சந்திப்பின்போது, ஏற்கனவே உலக வங்கியால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த இரண்டு திட்டங்களின் நடைமுறைப்படுத்தல் களமட்டத்தில் எவ்வாறு அமையவுள்ளது என்பது தொடர்பிலும், அதற்கான வேலைத்திட்டக் கால அட்டவணை தொடர்பிலும் ஆளுநர் தலைமையிலான குழுவினருக்கு உலக வங்கிக் குழுவினர் விரிவாக விளக்கமளித்தனர்.
இந்த முக்கிய கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.










