‘ அரசிலிருந்து என்னை வெளியேற்ற சதி’ – கம்மன்பில கலக்கம்

“ அரசியிலிருந்து நான் வெளியேற்றப்படும் பட்சத்தில் மக்களின் மடியில்தான் விழுவேன். நாய்கள் குறைக்கப்படும். அவற்றின்மீது கல்வீச்சு தாக்குதல் நடத்துவதற்கு நின்றால் எனது பயணமே தடைபடும். எதற்காகவும் என்னை மாற்றிக்கொள்ளப்போவதில்லை.” – என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரிடம், அரசியிலிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா என எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்றிருந்த அமைச்சர், வேகப்பந்து வீச்சாளர்கள், சுழல்பந்து வீச்சாளர்கள் என அனைவரும் பங்கேற்றுள்ளீர்கள் என ஊடகவியலாளர்களை நோக்கி புன்னகையுடன் விளித்தார்.

இதன்போது நீங்கள் ஆட்டமிழந்துவிடுவீர்கள்போல உணர்கின்றோம் என ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார். ( நம்பிக்கையில்லாப் பிரச்சினை மற்றும் அரச கூட்டணிக்குள் ஏற்படுள்ள பிரச்சினைகளை மையப்படுத்தியே இந்த கருத்து முன்வைக்கப்பட்டது)

இதற்கு பதிலளித்த அமைச்சர்,

“ அப்படியா? ஆட்டமிழக்க வைப்பதற்கு தீவிர முயற்சிகள் இடம்பெறவே செய்கின்றன. ஆனாலும் ஆட்டமிழக்காது ஆடிவருகின்றேன். எல்லா பந்தையும் அடித்தாடமல் இருப்பதுதான் நீண்டதொரு இன்னிங்ஸின் இரகசியம்.” – என்றார்.

கேள்வி – ஆனால் பந்து விக்கெட்டுக்கு வந்தால்?

பதில் –  முடிந்தால் விக்கெட்டை எடுத்து காட்டுங்கள். ஆட்டமிழப்பு பற்றி எந்தவொரு அறிவிப்பும் இல்லைதானோ….

கேள்வி – கம்மன்பில அரசியிலிருந்து வெளியேறுவார் அல்லது வெளியேற்றப்படுவார் எனக் கூறப்படுகின்றதே….?

பதில் – என்னை வெளியேற்றினால் மக்களின் மடியில்தான் விழுவேன்.

கேள்வி – எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் நீங்கள் எடுத்த முடிவு தவறு என்ற நிலைப்பாட்டில் சில அமைச்சர்கள் இன்றளவிலும் உள்ளனரே….?

பதில் – அரச தலைவர், அரசாங்கத்தின் தலைவர், அமைச்சரவையின் தலைவர், பாதுகாப்பு படைகளின் தலைவர்  என நான்கு பதவிகளை வகிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜுன் 13 ஆம் திகதி அறிவிப்பொன்றை விடுத்தார்.  ஜனாதிபதியின் தலைமையில் பிரதமரின் பங்குபற்றலுடன் நடைபெற்ற வாழ்க்கைச்செலவு தொடர்பான அமைச்சரவை உபக்குழு கூட்டத்தின்போதே எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் எரிபொருள் விலை உயர்வை எவராவது சவாலுக்குட்படுத்துவார்களாயின், ஜனாதிபதி பொய்யுரைத்துள்ளார் என கூறவே அதன்மூலம் விளைகின்றனர் என பொருள்படுகிறது.அவ்வாறானவர்களிடம் ஜனாதிபதிமீது நம்பிக்கையில்லாயா, அவ்வாறு நம்பிக்கையில்லையெனில் எதற்காக ஜனாதிபதியின்கீழ் இருக்கின்றீர்கள் என அவர்களிடம் கேள்வி எழுப்புங்கள்.

கேள்வி – நீங்கள் அரசியிலிருந்து வெளியேற்றப்படுவீர்கள் என எவராவது குறிப்பிட்டால் உங்களின் பதில் என்னவாக இருக்கும்?

பதில் – என்னை வெளியேற்றுவார்களா இல்லையா என்பது தொடர்பில் தேடி பார்த்த, அதற்கேற்றவகையில் எனது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்வதற்கு நான் தயாரில்லை. நாய்கள் குறைக்கட்டும். அதற்கு கல்லெறியபோனால் எனது பயணமே தடைபடும். நாய்கள் குறைக்கட்டும். நான் முன்னோக்கி பயணிப்பேன்.

Related Articles

Latest Articles