உள்ளாட்சிசபைத் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில், அத்தினத்தில் தேர்தல் நடைபெறாது என உறுதியாக அறிவித்துள்ளார் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ.
தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகிய அரசியல் விவாத நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துகளை முன்வைக்கையிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.
” உள்ளாட்சிசபைத் தேர்தலால் இந்நாட்டில் எந்தவொரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை. தேர்தல் நடைபெறும் என்ற போதிலும் அது ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறுமா என்பது சந்தேகமே. அந்நாளில் தேர்தல் நடக்காது என்பதே எனது உறுதியான கருத்து.
தேர்தலை விடவும் முக்கியத்துவம் – முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய விடயங்கள் உள்ளன. அவை தொடர்பிலேயே கவனம் செலுத்தப்படுகின்றது. தேர்தலைவிடவும் மக்களுக்கு உணவு மற்றும் சுகாதார தேவைகளே அவசியம்.” – எனவும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.
அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைத்த பின்னரே அமைச்சரவை மாற்றம் இடம்பெறும். இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள பலரும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவார்கள்.” – என்றும் அமைச்சர் ஹரின் குறிப்பிட்டார்.
