கஹாவத்தை, நீலாகாமம் இலக்கம் 01 தோட்டப்பிரிவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ராஜாராம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“கஹாவத்தை நீலாகாமம் தோட்டப்பிரிவில் இடம்பெற்ற இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரசாங்கமும், ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ச்சியாக மௌனம் காத்து வருவது கவலையளிக்கிறது.
2013 ஆம் ஆண்டு தெரணியகலை நூரி தோட்டத்தில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவம், தற்போதைய சூழலை நினைவூட்டுகிறது.
கடந்த காலங்களில் இப்பிரதேசத்தில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற பல்வேறு வன்முறைகள், குற்றச்சம்பவங்கள் மற்றும் அடக்குமுறைகளுக்குப் பின்னால் ஒரே மாதிரியான குண்டர் கும்பலே இயங்குகிறதோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
இந்தச் சம்பவம் மீண்டும் இடம்பெறாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், ‘அடக்குமுறைக்கு எதிரான அஹிம்சை’ என்ற கோணத்தில் நாம் சிந்திக்க நேரிடும் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.
தோட்ட முதலாளிகளால் ஏவப்படும் இத்தகைய காடையர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் 25 பேர் கொண்ட குழுவினர் மீது முறைப்பாடு அளிக்கப்பட்ட போதிலும், காவல்துறையினர் ஒன்பது பேரை மட்டுமே கைது செய்துள்ளனர்.
அம்பு எய்தவர்கள் பாதுகாப்பாக இருக்க, அம்பு மாத்திரம் தற்போது காவல்துறையினரால் கையாளப்படுகிறது. இந்த வன்முறைக்கு மூலகாரணமான தோட்ட முதலாளிக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஒரு நிதர்சனமான உண்மை. வழக்கு விசாரணையின்போது சந்தேக நபர்களில் சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில், தோட்டப்புற மக்கள் எத்தகைய நம்பிக்கையில் அங்கு வாழ்வது?
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் வரையிலும், சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படும் வரையிலும் எமது போராட்டம் தொடரும்,” என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.










