பசறை, ஜூன் 08 – கட்டுமானத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் போதுமான அளவில் உறுதிப்படுத்தப்படாத நிலை தொடர்வதாக இலங்கை கட்டுமானத் துறை தொழிலாளர் தொழிற்சங்கத்தின் தலைவர் வேலாயுதம் ருத்ரதீபன் தெரிவித்துள்ளார்.
பசறை பிரதேசத்தில் செயல்பட்டு வரும் கட்டுமானத் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் கட்டுமானத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலன்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் இன்னும் பல சவால்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
கொரோனா தொற்று பரவல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் கட்டுமானத் துறை கடுமையாக பாதிக்கப்பட்ட போதிலும், தற்போது மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், திறமையான தொழிலாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், பொருளாதாரக் காரணங்களால் பலர் வெளிநாடுகளுக்குச் செல்வதாகவும், இதனால் நாட்டில் திறமையான தொழிலாளர்களின் பற்றாக்குறை உருவாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் தொழில்திறன்களை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புகள் காணப்பட்டாலும், அவை அடித்தட்டு மக்களிடம் முறையாக சென்றடைவதில் குறைபாடுகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கட்டுமானத் துறையில் பெரும்பாலான தொழிலாளர்கள் முறைசாரா தொழில் அமைப்பிற்குள் உள்ளடக்கப்பட்டிருப்பதால், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சமூகப் பாதுகாப்பு, காப்புறுதி மற்றும் நலன்புரித் திட்டங்கள் முழுமையாக சென்றடைவதில்லை என்றும் அவர் கவலை வெளியிட்டார்.
எனவே, கட்டுமானத் தொழிலாளர்களின் பாதுகாப்பு, திறன் மேம்பாடு மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் என வேலாயுதம் ருத்ரதீபன் வலியுறுத்தினார்.
– ராஜரத்னம் சுரேஷ்குமார்)










