வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளும் திகதியை நிர்ணயிப்பதற்காக விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் ஜுலை 1 அல்லது 2ஆம் திகதியளவில் நடைபெறும் இக்கூட்டத்தில் கட்சித் தலைவர்களும், கட்சிகளின் சிறப்பு பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.
ஜுலை மாதத்துக்கான முதல்வார நாடாளுமன்ற அமர்வு ஜுலை 06 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. அவ்வாரத்துக்கான நிகழ்ச்சி நிரல் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டு தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கயைில்லாப் பிரேரணையை அவசர விடயமா கருதி, விவாதத்துக்கு உட்படுத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எனினும், விவாத திகதி தொடர்பில் மேற்படி கூட்டத்திலேயே தீர்மானம் எடுக்கப்படும்.
அதேவேளை, அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருட்களின் விலை மீள குறைக்கப்படுமானால் நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப்பெறுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவே உள்ளது என அக்கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.