கடும் மழை பெய்துகொண்டிருந்த இரவு வேளையில், வியாபார நிலையம் ஒன்றின் கூரை மீது ஏறி திருட்டில்முயற்சித்தார் எனக் கூறப்படும் சந்தேகநபர், பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கம்பளை – கண்டி பிரதான வீதியில், ஆலயம் ஒன்றுக்கு முன்பாக அமைந்துள்ள வியாபார நிலையத்திலேயே நேற்று இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வியாபார நிலையத்தின் கூரை மீது ஏறிய நபர், கடைக்குள் நுழைவதற்குப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, அருகிலுள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கு சத்தம் கேட்டதைத் தொடர்ந்து அவர்கள் வெளியில் வந்து பார்த்துள்ளனர். அப்போது, ஒருவர் வியாபார நிலையத்தின் கூரை மீது ஏறி கடைக்குள் நுழைய முயற்சிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து, வியாபார நிலைய உரிமையாளர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து குறித்த நபரை மடக்கிப் பிடித்துள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டு, கம்பளை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
க.யோகா
