சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் தொலைபேசிகள் கடத்தல் இடம்பெற்று வருவதாக கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்களின் ஒன்றியத்தின் உறுப்பினர் பிரியந்த ஜயசிங்க மேற்கூறியவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,”அரசாங்கத்திற்கு வரி வருமானத்தை இழக்கச் செய்யும் வகையில் பொதிகள் ஊடாக கையடக்கத் தொலைபேசிகள் இறக்குமதி செய்யப்படுவதாக குறிப்பிட்டார்.
கைப்பேசிகள் இறக்குமதியின் போது, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் பொதிகளின் ஊடாக கைப்பேசிகள் கொண்டு வரப்படுவதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்.
இதன் ஊடாக பாரியளவில் வரி வருமானம் இழக்கப்படும் நிலையில், 2021-2022 ஆண்டுகளில் மட்டும் சுமார் 100 மில்லியன் டொலர்கள் உண்டியல் முறையில் வெளியேறியுள்ளது.
இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட 20 பேர் கொண்ட குழுவே இவ்வாறு தொலைபேசிகளை இலங்கைக்கு கொண்டு வருகின்றது.
இந்த கைப்பேசிகள் எதுவும் TRC ஆல் அங்கீகரிக்கப்படவில்லை. இது குறித்து அரசிடம் எந்த தகவலும் இல்லை. எனவே, குறித்த கைப்பேசிகளை இவ்வாறு கொண்டு வருவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும்.”என தெரிவித்துள்ளார்










