தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வானது பாராளுமன்றத்தில் ஒரு சட்டமூலம் நிறைவேற்றப்படுவதன் மூலம் தற்போதைய சம்பள பிரச்சினையை முடிவு காண முடியும் என மலையக மக்கள் முன்னணியின் செயலாளரும் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.விஜயசந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனது அதிகாரத்தினை அடிப்படையாக கொண்டு ஒரு கட்டளையை பிறப்பித்து அதன் ஊடாக இதனை உறுதிப்படுத்த வேண்டும்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.
ரூபா. 1000 சம்பளம் என்பது எவ்வித கழிப்பீடுகளும் இன்றி முழுமையாக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது மலையக மக்கள் முன்னணியினதும் மலையக தொழிலாளர் முன்னணியினதும் நிலைப்பாடாகும்.
மேலும் தோட்ட தொழிலார்களின் சுகாதாரம், பாதுகாப்பு, சமூக நலன் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய வகையில் கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வேண்டும். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் சம்பள விடயத்தை மட்டும் மையப்படுத்திக் கொண்டு கூட்டு ஒப்பந்தந்தில் உள்ள ஏனைய விடயங்களை தாரைவார்த்து விடக் கூடாது என்ற விடயத்தையும் சுட்டிக்காட்டினார்.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மூன்றாம் தரப்பாக தொழில் அமைச்சரையும் உள்வாங்க வேண்டும். அதுதான் எதிர்காலத்தில் தோட்ட தொழிலார்களின் நலன் சார்ந்த விடயங்களை பாதுகாக்க அரசின் தலையீட்டை தொடர்ந்து தக்க வைக்க வழிசெய்யும் என்றார்.
இன்றும் தோட்டங்களின் முழுமையான உரிமையாளன் அரசாங்கமே. தோட்ட காணிகள் அரசாங்கத்துக்கே சொந்தம். தோட்ட கம்பனிகள் முகாமைத்துவத்தையே வாடகைக்கு எடுத்துள்ளன, இந்த அடிப்படையில் தோட்ட கம்பனிகளை அரசினால் வெளியேற்ற முடியும் என்பதனை தோட்ட கம்பனிகள் கவனத்தில் கொண்டு இந்த சம்பள உயர்வு விடயத்தில் இறங்கி வர வேண்டும என்று கோரினார்.
மேலும் தற்போதய அரசின் இந்த சம்பள உயர்வு முயற்சி வெற்றியளிக்கும் போதுதான் தோட்ட தொழிலாளர்களின் உரிமைகளை எதிர்காலத்தில் வென்று கொள்வதற்கு அரசின் ஆதரவினை பெற்றக் கொள்ள முடியும். மலையக தொழிற்சங்கங்களும் அரசியல் தலைமைகளும் தங்கள் சுயநல போக்கினையும் போட்டிகளையும் கைவிட்டு இவ்விடயத்தில் அரசிற்கு தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்ற அழைப்பை விடுத்தார்.
மேலும் அரசின் இந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை என்றால் மலையக தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து அரசிற்கு ஆதரவாகவும் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கவும் பாரிய வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க வேண்டும்.
