” 43 ஆம் படையணி எனும் பெயரில் புதியதொரு அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவது குறித்து எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வியக்கமும் எமது அணியுடன் இணைந்தே செயற்படும். எது எப்படி இருந்தாலும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரே ஜனாதிபதி வேட்பாளர். இதனை வேறு எவருக்கும் வழங்க மாட்டோம்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, 43 ஆவது படையணி எனும் பெயரில் புதியதொரு அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு சம்பிக்க ரணவக்கவால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஜனநாயக அம்சங்களை அடிப்படையாகக்கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் கட்சி பலப்படுத்தப்படும். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஐக்கிய கூட்டணி அமைக்கப்படும். இக்கூட்டணியில் எமது கொள்கையுடன் ஒத்துபோகக்கூடியவர்கள் இணையலாம். அதற்கான அழைப்பை விடுக்கின்றோம்.
சம்பிக்க ரணவக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவுள்ளார். 43 என்ற அரசியல் இயக்கம் பற்றி எமக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக பல வழிகளிலும் தாக்குதல்களை தொடுக்கவேண்டும். அதற்காக அணிகள் இருப்பது சிறப்பு.
எது எப்படியிருந்தாலும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் கூட்டணியின் தலைவராக சஜித் பிரேமதாசவே செயற்படுவார். அவ்வாறு தலைவர் பதவியை வகிப்பவரே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார். பொது வேட்பாளராக மாற்று கட்சி வேட்பாளர்களை நிறுத்துவதற்கு வாய்ப்பு வழங்கப்படாது. அவ்வாறு வழங்கி கட்சிக்கும், ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்ட அநீதிகள் தொடர்பான படிப்பினை எமக்கு இருக்கின்றது. “
