நெதர்லாந்துக்கு எதிரான டி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஆரம்ப சுற்றின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி இன்று (20) களமிறங்கவுள்ளது. இலங்கை நேரப்படி போட்டி காலை 9.30 இற்கு ஆரம்பமாகின்றது.
கீலோங், சிமன்ட்ஸ் அரங்கில் நடைபெறும் இந்தப் போட்டி இலங்கை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கு வாழ்வா சாவா ஆட்டமாக அமையவுள்ளது.
நமீபியாவிடம் முதல் போட்டியில் இலங்கை மோசமான தோல்வியை சந்தித்தபோதும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான ஆட்டத்தில் இலகுவாக வெற்றியீட்டியது. அந்த அணி நிகர ஓட்ட விகிதத்தில் நெதர்லாந்தை பின் தள்ள உதவியது.
இதனால் இலங்கை அணி சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேற இன்றைய போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக சாதாரண வெற்றி ஒன்றை பெற்றாலே போதுமானதாக அமையும்.
மறுபுறம் நெதர்லாந்தும் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கு இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது அவசியமாகும். மற்றபடி இன்று நடைபெறும் ஏ குழுவுக்கான மற்றைய போட்டியான ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் நமீபிய அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஐக்கிய அரபு இராச்சியம் வென்றால் நெதர்லாந்துக்கு சுப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேற முடியும்.
நெதர்லாந்து அணி புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு போட்டிகளிலும் வென்று முதலிடத்தில் இருந்தபோதும் அதன் நிகர ஓட்ட விகிதம் இலங்கை மற்றும் நமீபியாவை விடவும் குறைவாக உள்ளது.
