“இலங்கைத் தமிழரசுக் கட்சியில் அங்கம் வகிக்கும் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வி.தவராசாவின் அறிக்கைகள் மக்கள் மத்தியில் மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,
இம் மாதம் 11 அல்லது 12ஆம் திகதிகளில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டு கட்சியைப் பிளவுபடுத்தக்கூடிய வார்த்தைகளைப் பிரயோகித்தவர்கள் மற்றும் பிரசார மேடைகளில் ஏனைய கட்சிகளை விமர்சித்தவர்கள் எந்தப் பொறுப்பில் இருந்தாலும் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
தமிழரசுக் கட்சிகளுக்குள் பிளவை ஏற்படுத்தும் முகமாகச் செயற்பட்ட உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஏனைய கட்சிகளை விமர்சித்தல், முரண்பட்ட கருத்துக்களை வெளியிடுதல் போன்ற செயற்பாடுகள் அண்மைய நாட்களில் அதிகரித்து வருகின்றன.
தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் ஏன் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பலரும் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே, எதிர்வரும் மத்திய செயற்குழுக் கூட்டத்தில், ஏனைய கட்சிகளை விமர்சித்தவர்கள் மற்றும் கட்சிகளைப் பிளவுபடுத்தக்கூடியவாறு செயற்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க நான் தயாராகவே உள்ளேன்” – என்றார்.










