ஸ்டாக்ஹோமில் நாளை (13) நடைபெறும் இரண்டாவது இந்தோ-பசிபிக் அமைச்சர்கள் அமர்வில் கலந்துகொள்வதற்காக, வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நேற்றுக் காலை சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமுக்கு பயணமானார்.
இந்த அமர்வு, ஐரோப்பிய ஒன்றிய சபையின் சுவீடிஷ் தலைமைத்துவத்தின் கீழ், ஐரோப்பிய வெளியுறவு செயற்பாட்டு சேவையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அமர்வில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொள்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அமர்வுக்கு சுவீடன் வெளியுறவு அமைச்சர் டோபியாஸ் பில்ஸ்ட்ரோம் மற்றும் வெளியுறவு, பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் பிரதிநிதி, ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவர் ஜோசப் பொரெல் ஆகியோர் இணைத் தலைமை தாங்குகின்றனர்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமர்வின் மூன்று வட்ட மேசை மாநாட்டின் ஒன்றான ‘மேலும் நிலையான செழுமையை ஒன்றாகக் கட்டியெழுப்புதல்’ என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் 01ஆவது வட்டமேசை கலந்துரையாடலுக்கு இணைத் தலைமை தாங்கவுள்ளார்.
ஆஸ்திரியா, டென்மார்க், பின்லாந்து, லாட்வியா, நெதர்லாந்து, ருமேனியா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் உட்பட, பல நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் அமைச்சர் அலி சப்ரி இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவார்.
சுவீடனிலுள்ள வர்த்தக சமூக த்தை குறிப்பாக தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் மூத்த அதிகாரிகளையும் அமைச்சர் சந்திக்க உள்ளார்.










