ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பிக்குகளின் துறவற ஆடை அகற்றப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் பௌத்த மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே கூறியதாவது:
“தான் ஒரு சிங்களப் பௌத்தன் என்பதை மஹிந்த ராஜபக்சவைப்போல் வெளியே வந்து, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் வெளிப்படையாகக் கூற முடியாது. முடிந்தால், தான் ஒரு சிங்களப் பௌத்தன் என்பதை ஜனாதிபதி வெளிப்படையாக அறிவிக்குமாறு ஒரு கட்சியாக நாங்கள் சவால் விடுக்கின்றோம். ஆனால் ஜனாதிபதி அவ்வாறு செய்யமாட்டார்.
ஞானசார தேரரின் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம். அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.
சிறையிலிருந்து பிக்குகள் நீதிமன்றத்திற்கு வரும்போது துறவற ஆடை அணிவிப்பதற்கும், மீண்டும் சிறைக்குச் சென்ற பின்னர் அதனைக் கழற்றுவதற்கும் புதிய திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. பிக்குகளுக்குரிய துறவற ஆடையை அகற்றுவதற்கு இவர்கள் யார்?
ஞானசார தேரருக்குத் துறவற ஆடை அணிவிக்கப்பட வேண்டும்; அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல், பிக்குகளின் துறவற ஆடை அகற்றப்பட்டமை தொடர்பில் சிங்களப் பௌத்த மக்களிடம் அரசாங்கம் மன்னிப்பு கோர வேண்டும்” என்று அவர் கூறினார்.










