‘தமிழர்களும் போராட்டத்தில் இணையவேண்டும்’ – எல்லே குணவங்க தேரர் அழைப்பு

வடக்கிலுள்ள வளங்களும் தற்போது விற்கப்பட்டுவருகின்றன. எனவே, இவற்றை தடுத்து நாட்டை மீட்பதற்கான சுதந்திர போராட்டத்துக்கு தமிழ் மக்களும் எமக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் – என்று அழைப்பு விடுத்துள்ளார் தேசத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவரான எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள வளங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிராகவும், அதனை தடுத்து நிறுத்தும் நோக்கிலும் தற்போதைய அரசுக்கு எதிராக இவ்வாரம் நீதிமன்றத்தை நாடுவதற்கும் தேரர் உத்தேசித்துள்ளார்.இதற்கான சட்டப்பூர்வ ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே நாட்டு வளங்களைப் பாதுகாப்பதற்காக தமிழ் மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்ற அறைகூவலை அவர் விடுத்துள்ளார்.

“காலனித்துவ ஆட்சியிலிருந்து இலங்கைக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுப்பதற்கு இன, மத , மொழி பேதங்களுக்கு அப்பால் தமிழ், சிங்கள, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ தலைவர்கள் அன்று ஒன்றிணைந்து போராடினார்கள். டி.பி. ஜாயா, சேர்.பொன்னம்பலம் இராமநாதன், சேர் பொன்னம்பலம் அருணாச்சலம், டி.எஸ். சேனாநாயக்க ஆகியோர் இணைந்து போராடினர்.நாட்டு மக்களும் இனங்களைச் சேர்ந்த மக்களும் ஓரணியில் திரண்டு செயற்பட்டனர்.

தற்போது எமது நாட்டுக்கு மீண்டுமொருமுறை சுதந்திரம்பெற்றுக்கொடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் தமிழ், சிங்கள, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்கள் ஒன்றுபடவேண்டும். நாட்டு வளங்கள் தொடர்ச்சியாக கொள்ளையடிக்கப்பட்டால் அவற்றை தடுத்து நிறுத்து, நாட்டை மீட்பதற்கான 2ஆம் சுதந்திர போராட்டத்தை மேற்கொள்ளவேண்டியிருக்கும். அதற்கு தமிழ் மக்களின் முழுமையான ஒத்துழைப்பும் அவசியம்.

யாழ்ப்பாணம் உட்பட வடக்கிலுள்ள வளங்களும் இன்று விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. எனவே, எமது நாட்டு வளங்களை பாதுகாப்பதற்கு இலங்கை தாயின் பிள்ளைகளாக தமிழ் இளைஞர்களும் முன்வரவேண்டும் என்ற அழைப்பை விடுக்கின்றேன்.” – என்றார்.

Related Articles

Latest Articles