‘நிபந்தனை இன்றியே இந்தியா கடன் – 3 ஆண்டுகளுக்கு பிறகே திருப்பி செலுத்த வேண்டும்’

” கடன் வழங்குவதற்கு இந்தியா எவ்வித நிபந்தனையையும் முன்வைக்கவில்லை. இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என பாரத பிரதமர் உறுதியளித்துள்ளார்.” – என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச நேற்று நாடு திரும்பினார்.

விமான நிலையத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே, நிதி அமைச்சர் இவ்வாறு கூறினார்.

” இலங்கைக்கு பொருளாதார மற்றும் சமூக ரீதியில் ஒத்துழைப்பு வழங்கப்படும் என இந்திய பிரதமர் குறிப்பிட்டார். அத்துடன், எமது ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் இயற்கை விவசாயம் மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி திட்டம் தொடர்பில் பிரதமர் மோடி அக்கறையை வெளிப்படுத்தினார்.

இந்தியா வழங்கும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனில் மருந்து, உணவு பொருட்கள் வாங்கப்படும். புத்தாண்டுக்கு எவ்வித தட்டுப்பாடுகளும் இன்றி அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படும்.

கடன் வழங்க இந்தியா எவ்வித நிபந்தனையையும் விதிக்கவில்லை. வங்கியில் கடன் வாங்கும்போது வட்டி, செலுத்தப்படும் காலம் உள்ளிட்ட விடயங்கள் கேட்கப்படும். அதுபோல்தான் இதுவும். மாறாக நிபந்தனைகள் அல்ல. மூன்று வருடங்களுக்கு பிறகே கடனை திருப்பி செலுத்த வேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles