தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்காக வழங்கப்பட்ட நிவாரணப்பொருட்களை களவாடிய தொழிற்சங்கத் தலைவரை கட்சியிலிருந்து இடைநிறுத்துவதற்கும், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட செல்வகந்த தோட்ட மக்களுக்கு வழங்கப்படவிருந்த நிவாரணப்பொருட்களே தமது கட்சி மற்றும் மாற்று கட்சி தொழிற்சங்க தலைவர்கள் உள்ளிட்ட குழுவினரால் இவ்வாறு களவாடப்பட்டுள்ளன என்று இ.தொ.காவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்தே இதனுடன் தொடர்புபட்ட தோட்டத் தலைவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்தை இராஜாங்க அமைச்சரின் கவனத்துக்குகொண்டு வந்த இ.தொ.காவின் சிரேஸ்ட இளைஞர் அணி அமைப்பாளர் இளையராஜா மற்றும் இணைப்பாளர் கிஷான் ஆகியோருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதோடு ஏனைய பகுதிகளில் உள்ள இளைஞர்களும் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் விழிப்புணர்வுடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என இ.தொ.காவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் பொகவந்தலாவ பிராந்திய தொழிற்சங்க பிரச்சினைகளுக்கு வெகுவிரைவில் தீர்வு எட்டப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
