நுவரெலியாவின் வருடாந்தம் இடம்பெறும் வசந்த கால நிகழ்வுகள் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், நுவரெலியா நகரம் உள்ளிட்ட பிரதேசங்களை எழில்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மாநகர சபை ஆணையாளர் சுஜீவா போதிமான்ன தெரிவித்துள்ளார். இம்முறை வசந்த கால நிகழ்வுகளில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ள அவர், வழமைபோன்றே இம்முறையும் வெகுவிமர்சையாக வசந்தகாலத்தை சிறப்பிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கு முன்னோடியாக நுவரெலியா நகரம், கிரேகரி வாவி, விக்டோரியா பூங்க உள்ளிட்ட உல்லாசப்பயணிகளை கவரும் பிரதேசங்கள் துப்புரவு செய்யப்பட்டு எழில்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நுவரெலியாவின் வசந்த காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாத காலத்திற்கு தொடர்ந்து இடம்பெறுவதுடன் அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கிரேகரி வாவியில் இடம்பெறும் பயணிகள் படகு பொழுதுபோக்கு அம்சங்களை சிறப்பாக முன்னெடுக்கும் வகையில் வாவியில் நிறைந்திருந்த தொன் கணக்கான நீர்த்தாவரங்கள் அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா நகரில் வாழும் மக்கள் அங்கு வருகைதரும் உள்நாட்டு வெ ளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் கவனயீனமாக நகர்ப்புறங்களில் எறியப்படும் கழிவுகளால் நுவரெலியா நகரத்தின் எழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், கழிவுகளை அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மாத்திரம் போடுவதில் கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
