பதுளையில் தனிமையில் வாழ்ந்த முதியவரின் மரணத்தில் சந்தேகம்

பதுளை இரண்டாம் கட்டை சமகிபுர பிரதேசத்தில் 20ஆம் திகதி இரவு திடீரென உயிரிழந்த 66 வயது முதியவரின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதென பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டில் 66 வயது தாத்தாவுடன் 15 வயது பேரனும் தங்கியிருந்த நிலையிலே​யே இந்த மரணம் பதிவாகியுள்ளது.

முதியவரின் சடலம் மலர்சாலையில் ஒப்படைக்கப்பட்ட போது, முதியவரின் உடலில் பல இடங்களில் காயங்கள் காணப்பட்டதாக பதுளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவித்ததன் பின்னர், பதுளை நீதவான் டபிள்யு.என்.டீ. சில்வா சடலத்தைப் பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனை அறிக்கையும் சமர்ப்பிக்குமாறு பதுளை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக பதுளை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த முதியவருடன் தங்கியிருக்கும் சிறுவன் தனியார் பாடசாலையொன்றில் கல்வி கற்று வருவதுடன் அவரது தந்தை வெளிநாட்டிலும் தாய் நீர்கொழும்பு பிரதேசத்திலும் வசித்து வருகின்றமை தெரியவந்துள்ளது.

அத்துடன் விடுமுறையைக் கழிப்பதற்காக தாத்தாவின் வீட்டுக்கு சிறுவன் வந்துள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles