நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் ருசிக்க ஆரம்பித்துவிட்டார். இதன்காரணமாகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் உள்ளடங்கலாக புதிய அரசமைப்பு பற்றி அவர் மௌனம் காத்துவருகின்றார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்று பணிப்பாளரான சட்டத்தரணி அஜித் பி பெரேரா எம்.பி. தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆவது வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ புதிய அரசமைப்பு இயற்றப்படும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளிக்கப்பட்டிருந்தது. எனினும், இதற்குரிய நடவடிக்கை இன்னும் ஆரம்பமாகவில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை தற்போதைய ஜனாதிபதியும் ருசிக்க ஆரம்பித்துவிட்டார் போலும்.
மாகாணசபைத் தேர்தல் சம்பந்தமாகவும் வாக்குறுதி வழங்கப்பட்டது. அதுவும் நடக்கவில்லை. சட்டம் இயற்றி தருமாறு ஜனாதிபதி தற்போது கூறுகின்றார். பழைய முறைமையின்கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் தனி நபர் பிரேரணையொன்றுகூட முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே, மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குரிய ஏற்பாடுகளுக்கு நாம் முழு ஆதரவை வழங்குவோம். குறிப்பிட்டார்.
மாகாணசபைகளில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத ஜனநாயக விரோதமாகும்;. எனவே, தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். எல்லா விடயங்களை பற்றியும் பேசும் ஜனாதிபதி, புதிய அரசமைப்பு பற்றி ஏன் மௌனம் காக்கின்றார்? புதிய அரசமைப்பை இயற்றுவதற்காக இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் எவை? அதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா? எனவும் அவர் கேள்விகளை எழுப்பினார்.










