ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் நாளை (18) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வு அவருடைய ஆலோசனைக்கு அமைய மிகவும் எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முறை மரியாதை துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படுத்தல் மற்றும் வாகன அணிவகுப்பு என்பன இடம்பெறாது.
எனினும், ஜனாதிபதியை வரவேற்கும் முகமாக நாடாளுமன்ற வளாகத்தில் பொலிஸ் கலாசார பிரிவின் பங்களிப்புடன் கலாசார மரியாதை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பிக்கும் நிகழ்வுக்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள், பிரதம நீதியரசர், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் சபைஒத்திவைப்புவேளை விவாதம் நடைபெறவுள்ளது.










