மரதன் ஓடிய மாணவன் மரணம்!

திருக்கோவில், மெதடிஸ் தமிழ் மகா வித்தியாலய மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்ற நிலை ஏற்பட்டது.

திருக்கோவிலை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க ஜெயக்குமார் விதுர்ஜன் எனும் மாணவனே உயிரிழந்துள்ளார்.

திருக்கோவில் – மெதடிஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று (11) காலை விளையாட்டு போட்டியின் போது மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற மாணவன் திடிரென மயக்கமுற்ற நிலையில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு அம்மாணவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனை அடுத்து குறித்த மாணவன் உயிரிழந்த சம்பவத்தை அறிந்த பாடசாலை மாணவர்கள் , பொதுமக்கள திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று கூடி மாணவனின் மரணத்திற்கு வைத்தியர்களின் அலட்சிய நிலை காரணம் என குற்றஞ்சாட்டி நீதி கோரி போராட்டங்களை முன்னெடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு மேலதிக பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் வைத்தியசாலைமீது கல்வீச்சு தாக்குதலும் நடத்தினர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

Related Articles

Latest Articles