இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேருந்தின் சாரதியொருவர், மதுபோதையில் பேருந்தை செலுத்தியபோது ஹிங்குறுகடுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான (வெள்ளவாய டிபோ) பேருந்து ஒன்று நேற்று மாலை 6.00 மணியளவில் வெள்ளவாயவில் இருந்து சியம்பலா குண வீதி ஊடாக ஹிங்குறுகடுவ நோக்கி வந்து கொண்டிருந்தது.
குறித்த பேருந்து அதி வேகமாக பயணித்ததாகவும், இரண்டு இடங்களில் விபத்து ஏற்பட இருந்ததாகவும் , அமுனாண்ட ஆர பகுதியில் வைத்து கல்லொன்றில் பின் டயர் மோதியதில் டயர் ஒன்று வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பிரத்தியேக வகுப்புக்கு சென்று பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்த 7 வயது சிறுவன் ஒருவரும் 14 வயதுடைய சிறுமி ஒருவரும் காயமடைந்து ஹிங்குறுகடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹிங்குறுகடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
நிலைமையை அவதானித்த பின்னர் பேருந்தினுள் இருந்த 18 மாணவி ஒருவர், சாரதியிடம் சென்று பேருந்தை மீண்டும் செலுத்த வேண்டாம் என்றும், நீங்கள் மது போதையில் இருக்கின்றீர்கள் என்றும் கூறியுள்ளார். அத்துடன், பேருந்தில் இருந்து கீழே இறங்கி பேருந்துக்கு முன் நின்று, தான் பேருந்தை செலுத்த விட மாட்டேன் என்று கூக்குரல் இட்ட போது அவ்விடத்தில் பொது மக்களும் ஒன்று கூடினர். நிலைமையை மாணவி விவரித்துள்ளார். அத்துடன், இது தொடர்பில் ஹிங்குறுகடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கையடக்க தொலைபேசியின் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த ஹிங்குறுகடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செனரத் பண்டார, சாரதியை கைது செய்து பரிசோதனைக்கு உட்படுத்திய போது சாரதி மது போதையில் இருந்தது தெரியவந்துள்ளது.
இதன்போது 44 வயதுடைய கரம்பிடிய ஹிங்குறுகடுவ பகுதியை சேர்ந்த பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக ஹிங்குறுகடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செனரத் பண்டார தெரிவித்தார்.
ராமு தனராஜ்










