மியன்மார் நிலநடுக்கத்தில் இதுவரை ஆயிரத்து 600 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 ஆயிரத்து 500 இற்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். பலர் காணாமல்போயுள்ளனர்.
மியன்மார் மோனிவா நகருக்கு அருகே நேற்று முன்தினம் காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 7.7 ஆக பதிவானது.
அடுத்த 10 நிமிடங்களில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 6.8 ஆக பதிவானது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
மியன்மார் தலைநகர் நேப்பிடா, சாகைங், மண்டலை, பைகோ, மாகுவே, ஷான் ஆகிய 6 மாகாணங்கள் நிலநடுக்கத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த 6 மாகாணங்களில் அவசர நிலை அமல் செய்யப்பட்டிருக்கிறது.
மியன்மாரில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. ராணுவ ஆட்சிக்கு எதிராக அரக்கான் படை என்ற கிளர்ச்சிப் படை ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. தற்போதைய சூழலில் மியான்மரின் 50 சதவீத பகுதிகள் மட்டுமே ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. மீதமுள்ள 50 சதவீத பகுதிகளை அரக்கான் படை நிர்வகித்து வருகிறது. இருதரப்பும் இடையே தீவிரமாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளே நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன.
பொதுவாக மியான்மரின் ராணுவ நிர்வாகம், வெளிநாடுகளின் உதவியை கோருவது கிடையாது. நிலநடுக்க பாதிப்பு அளவுக்கு அதிகமாக இருப்பதால் முதல்முறையாக மியான்மர் ராணுவ தலைமை தளபதி மின் ஆங் ஹலாங், சர்வதேச நாடுகளிடம் பகிரங்கமாக உதவி கோரி உள்ளார்.
அதேவேளை, மியன்மாரின் அண்டை நாடான தாய்லாந்திலும் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் தலைநகர் பாங்காக்கில் புதிதாக கட்டப்பட்ட 30 மாடி கட்டிடம் இடிந்து நொறுங்கியது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். 68 பேர் படுகாயம் அடைந்தனர். 101 பேர் கட்டிடத்தில் சிக்கி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மியான்மர் ராணுவ நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் நிலநடுக்கத்தால் இதுவரை 1,644 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 3,500 பேர் படுகாயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகள், மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலரை காணவில்லை.
இராணுவ ஆட்சி நடைபெறுவதால் மியன்மார் நாட்டின் நிலநடுக்க பாதிப்புகள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தால் சுமார் 10,000 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.