முடிவுக்கு வருமா நெதன்யாகுவின் அரசியல் வாழ்வு?

இஸ்ரேலில் இன்று (27) நடைபெறும் தேர்தல், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய தேர்தலாக அமைந்துள்ளது.

2023ஆம் ஆண்டு ஹமாஸ் நடத்திய தாக்குதல்கள், அதனைத் தொடர்ந்து காசா மற்றும் ஈரானுடனான போர்கள், சர்வதேச அளவில் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றமை ஆகியவற்றின் பின்னணியில், நெதன்யாகுவின் தலைமைத்துவம் குறித்து மக்கள் தீர்மானிக்கவுள்ளனர்.

இஸ்ரேலின் மிக நீண்டகாலம் பிரதமராகப் பதவி வகித்த தலைவரான நெதன்யாகு, சுமார் 19 ஆண்டுகள் அரசியல் அதிகாரத்தில் இருந்துள்ளார். இருப்பினும், தற்போதைய தேர்தலில் அவரது லிகுட் கட்சியும் வலதுசாரிக் கூட்டணிக் கட்சிகளும், முன்னாள் இராணுவத் தலைமை அதிகாரி காடி ஐசென்கோட் தலைமையிலான போட்டிக் கூட்டணியுடன் கடுமையான போட்டியை எதிர்கொள்கின்றன. கருத்துக்கணிப்புகளின்படி, இரு தரப்பினருக்கும் இடையில் நெருக்கமான போட்டி நிலவுகின்றது.

நெதன்யாகு தனது போர்க்காலத் தலைமைத்துவத்தையும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான நெருங்கிய உறவையும் முன்னிறுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நெதன்யாகுவுக்கு ட்ரம்ப் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளார். ஈரானிடமிருந்து உருவாகும் அச்சுறுத்தலை முறியடிக்க அமெரிக்கா மீண்டும் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும், அதற்கு நெதன்யாகு அதிகாரத்தில் தொடர்வது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்துள்ள நெதன்யாகுவின் பிரதான எதிராளியான காடி ஐசென்கோட், அச்சத்தையும் பொய்களையும் அச்சுறுத்தல்களையும் அடிப்படையாகக் கொண்ட பிரசாரத்தில் நெதன்யாகு ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். மக்களால் தெரிவுசெய்யப்படும் எந்தவொரு தலைவருடனும் ட்ரம்ப் இணைந்து செயற்படுவார் எனத் தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆட்சி அமைப்பதற்காக நெதன்யாகு மீண்டும் தீவிர வலதுசாரித் தலைவர்களான இதாமர் பென்-க்விர் மற்றும் பெசலெல் ஸ்மோட்ரிச் ஆகியோரின் ஆதரவை நாட வேண்டிய நிலை ஏற்படலாம். பலஸ்தீனர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டுவதாகக் குற்றஞ்சாட்டி, இந்தத் தலைவர்களுக்கு சில மேற்கத்திய நாடுகள் தடைகளை விதித்துள்ளன.

இருப்பினும், நெதன்யாகுவோ அல்லது ஐசென்கோட்டோ ஆட்சியமைப்பதற்குத் தேவையான தெளிவான பெரும்பான்மையைப் பெறுவார்கள் என்பது உறுதியாகவில்லை. 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் எந்தவொரு தரப்பினராலும் ஆட்சியமைக்கத் தேவையான கூட்டணியை உருவாக்க முடியாவிட்டால், அடுத்த ஆண்டு மீண்டும் தேர்தல் நடைபெறும் வரை நெதன்யாகு இடைக்காலப் பிரதமராகத் தொடரக்கூடும்.

இஸ்ரேலில் சுமார் 73 இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் சுமார் 3 இலட்சத்து 30 ஆயிரம் பேர் முதல் முறையாக வாக்களிக்கவுள்ளனர்.

ஒக்டோபர் 7 தாக்குதல்களுக்கான பொறுப்புக்கூறல்

1948ஆம் ஆண்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்டதற்குப் பின்னர் அந்நாடு எதிர்கொண்ட மிகவும் கொந்தளிப்பான காலகட்டங்களில் ஒன்றின் பின்னணியில் இந்தத் தேர்தல் நடைபெறுகின்றது. 2023 ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் தலைமையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள், அதனைத் தொடர்ந்து காசாவில் இஸ்ரேல் முன்னெடுத்த இராணுவ நடவடிக்கைகள் மற்றும் நெதன்யாகு தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பான உள்நாட்டு முரண்பாடுகள் ஆகியவை தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஒக்டோபர் 7 தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய பாதுகாப்புக் கட்டமைப்பின் பொறுப்புக்கூறல் இந்தத் தேர்தலில் முக்கிய விவகாரமாக மாறியுள்ளது. நெதன்யாகுவின் எதிர்ப்பாளர்கள், அன்றைய பாதுகாப்புத் தோல்விகள் தொடர்பாக சுயாதீனமான தேசிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

எனினும், நெதன்யாகுவின் ஆதரவாளர்கள் சிலர், ஒக்டோபர் 7 தாக்குதல்களுக்கு அவர் பொறுப்பல்ல என்றும், இஸ்ரேலை வழிநடத்துவதற்கு அவரே பொருத்தமான தலைவர் என்றும் தெரிவிக்கின்றனர்.

போரின் தாக்கமும் ஈரான் விவகாரமும்

ஒக்டோபர் 7 தாக்குதல்களின்போது ஹமாஸ் தலைமையிலான ஆயுதக் குழுவினர் சுமார் 1,200 பேரைக் கொன்றதுடன், மேலும் 251 பேரைப் பணயக்கைதிகளாகப் பிடித்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காசாவில் இஸ்ரேல் நடத்திய இராணுவ நடவடிக்கைகளில் பெரும்பாலான பகுதிகள் அழிவடைந்துள்ளன. இஸ்ரேலியத் தாக்குதல்களில் சுமார் 74,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, லெபனானில் ஈரானின் ஆதரவுடன் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராகவும் இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரானுடனும் இரு தரப்பினரும் பரஸ்பரத் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரான் இராணுவப் பயன்பாட்டுக்கான அணுவாயுதத் திறனைப் பெற்றுக்கொள்வதைத் தடுப்பது அடுத்த இஸ்ரேலிய அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாக இருக்க வேண்டும் என ஐசென்கோட் தெரிவித்துள்ளார். இதற்காக இராணுவ நடவடிக்கை அல்லது அமெரிக்காவின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் இராஜதந்திர உடன்பாடு உள்ளிட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டணி ஆட்சியைத் தீர்மானிக்கும் வாக்குகள்

பலஸ்தீனர்களுடன் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளின் அடிப்படையாக விளங்கிய இரு அரசுகள் தீர்வை, ஐசென்கோட் உட்பட இஸ்ரேலின் பெரும்பாலான யூதத் தலைமையிலான அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன.

எனினும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் யூதக் குடியேற்றவாசிகளால் பலஸ்தீனர்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளை ஐசென்கோட் விமர்சித்துள்ளார். அத்துடன், நெதன்யாகுவின் தீவிர வலதுசாரிக் கூட்டணிக் கட்சிகளுடனும் அவர் முரண்படுகின்றார்.

ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் நெதன்யாகு, அவற்றை மறுத்துள்ளதுடன், நீண்டகாலமாக நடைபெற்று வரும் வழக்கு விசாரணைகளும் அவரது அரசியல் எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால், முன்னர் அவரது கட்சிக்கு வலுவான ஆதரவு காணப்பட்ட சில பகுதிகளில்கூட அதிருப்தியடைந்த வாக்காளர்கள் எதிரணிக்கு ஆதரவாகப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இஸ்ரேலின் அரபு சிறுபான்மை வாக்காளர்களின் அதிகளவிலான வாக்குப்பதிவு, கூட்டணி ஆட்சியை அமைப்பதற்கான அரசியல் கணக்கீடுகளில் ஐசென்கோட்டுக்குச் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும், அரபுக் கட்சிகளுடன் நேரடியாகக் கூட்டணி அமைக்கப்போவதில்லை என அவர் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் எந்தவொரு தரப்பினருக்கும் தெளிவான வெற்றியை வழங்காமல், மிகக் குறுகிய பெரும்பான்மையிலேயே முடிவடையக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மொத்தத்தில், ஒக்டோபர் 7 தாக்குதல்களுக்கான பொறுப்புக்கூறல், காசா மற்றும் ஈரானுடனான போர்களின் விளைவுகள், ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் தீவிர வலதுசாரிக் கூட்டணியின் எதிர்காலம் ஆகியவை நெதன்யாகுவின் அரசியல் வாழ்வைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக இந்தத் தேர்தலில் உருவெடுத்துள்ளன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles