நாவலப்பிட்டிய நகரசபையில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பின்போது மொட்டு கட்சிக்கு ஆதரவாக வாக்களித்த கட்சி உறுப்பினர் செந்தூர் குமாருக்கு (சுரேஷ்) எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் உயர்பீடம் தீர்மானித்துள்ளது.
2018 இல் நடைபெற்ற உள்ளாட்சிமன்றத் தேர்தலின்போது நாவலப்பிட்டிய நகரசபையை ஐக்கிய தேசியக்கட்சி கைப்பற்றியது. ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிளவுபட்ட பின்னர் சஜித் அணி ஆதிக்கம் செலுத்தியது.
இந்நிலையில் தவிசாளராக செயற்பட்டவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு புதிய தவிசாளரை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதன்போது 2 மேலதிக வாக்குகளால் மொட்டு கட்சி உறுப்பினர் வெற்றிபெற்றார்.
வாக்கெடுப்பின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் முன்மொழியப்பட்ட அநுர பெர்ணான்டோவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற முடிவை ஜனநாயக மக்கள் முன்னணி எடுத்திருந்தது. எனினும், அக்கட்சியின் நியமன உறுப்பினரான சுரேஷ், மொட்டு கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்.
இந்நிலையிலேயே அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.