இராஜாங்க அமைச்சர் டயானா கமகே விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழு இன்று கூடுகின்றது.
பிரதி சபாநாயகர் தலைமையிலான இந்த குழுவின் முதல் கூட்டம் இன்று முற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் என்று குழு உறுப்பினரான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேயும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் முன்வைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சபாநாயகரால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தலைமையிலான இந்த குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ச, ரமேஷ் பத்திரண, கயந்த கருணாதிலக்க, இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தன்னை தாக்கினார் என குற்றஞ்சாட்டினார். இதனை சுஜித் பெரேரா நிராகரித்தார். அத்துடன், இரு தரப்பினரும் இது தொடர்பில் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையிலேயே இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி, அறிக்கை முன்வைப்பதற்காக சபாநாயகர் மேற்படி குழுவை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.










