ராகலையில் பச்சத்தண்ணீர் மாரியம்மன் ஆலய காணியை வெளியாரால் அபகரிப்பு!

ராகலையில் பச்சத்தண்ணீர் மாரியம்மன் ஆலயத்திற்கு சொந்தமான நிலத்தை வெளி நபர் ஒருவர் ஆக்கிரமித்து அங்கு கட்டடம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கும் ஆலய நிர்வாகம் இந்த விடயத்தில் தோட்ட நிர்வாகம் தலையிட்டு தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஆலய நிர்வாக சபை தலைவர் க.புஸ்பராஜ் தெரிவித்துள்ளதாவது.

ராகலை தோட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ள பச்சத்தண்ணீர் மாரியம்மன் ஆலயம், தோட்ட மக்களின் பொதுவான ஆலயமாகவும் பச்சத்தண்ணீரில் விளக்கு எரிந்த வரலாறு கொண்ட ஆலயமாகவும் திகழ்கிறது.

இந்த ஆலயத்தின் முகப்பில் காணப்படும் ஒரு பகுதி தரிசு நிலம் ஆலயத்திற்கு சொந்தமானது என ஆலய நிர்வாகத் தலைவர் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு காணப்படும் தரிசு நிலத்தை வெளி மாவட்டத்தை சேர்ந்த தனி நபர் ஒருவர் தான் இந்த இடத்தை பணம் கொடுத்து பெற்றுக் கொண்டதாக கூறி அவ்விடத்தில் கட்டடம் ஒன்றை அமைக்க ஏற்பாடுகளை செய்து வருகிறார். இது தொடர்பில் தோட்ட நிர்வாக அதிகாரி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு ஆலய நிர்வாக சபை கொண்டு வந்துள்ளது.

இருப்பினும் ஆலயத்திற்கு உரித்தான அந்த இடத்தில் கட்டடம் அமையும் பட்சத்தில் ஆலயத்தின் முகப்பு மூடப்பட்டு ஆலயத்தின் வெளித் தோற்றம் முற்றாக மறைக்கப்பட்டுவிடும்.

இதனால் ஆலயத்தை பார்த்து அம்மனை தரிசிக்க முடியாது அசௌகரிகத்துக்கு அடியார்கள் முகம் கொடுக்க நேரிடுவதுடன் ஆலயத்தின் பெருமைக்கும் பங்கம் ஏற்படும் என ஆலய நிர்வாக தலைவர் கவலை தெரிவித்துள்ளார்.

எனவே இந்த விடயத்தில் தோட்ட நிர்வாகம் தலையிட்டு ஆலய இடம் தொடர்பாக தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆ.ரமேஸ்

Related Articles

Latest Articles