உலகெங்கும் உள்ள மத்திய வங்கிகளால் வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டிருப்பது 2023இல் உலகில் பொருளாதார மந்தநிலை ஒன்றைத் தூண்டும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.

அதிகரித்து வரும் விலையேற்றத்தை சமாளிக்க கடந்த பத்து தசாப்தங்களில் காணாத வகையில் ஒத்திசைவு கொண்டதாக மத்திய வங்கிகள் வட்டி வீதத்தை அதிகரித்திருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.
விலை அதிகரிப்பு வேகத்தை குறைக்கும் முயற்சியாக கடன் பெறுவதை கடினம் ஆக்குவதாகவே இந்த அதிகரிப்பு உள்ளது. எனினும் இதனால் கடன் பெறுவது அதிக செலவு மிக்கதாகி பொருளாதார வளர்ச்சியை மந்தமடையச் செய்கிறது.
அமெரிக்க மத்திய ரிசேவ் வங்கி மற்றும் இங்கிலாந்து வங்கி ஆகியன அடுத்த வாரம் தமது முக்கிய வட்டி வீதத்தை அதிகரிக்கும் எதிர்பார்ப்புடன் நிதிக் கொள்கை சந்திப்புகளை நடத்தவிருக்கும் நிலையிலேயே உலக வங்கியின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
1970 தொடக்கம் பொருளாதார மந்தநிலை மீட்சிக்குப் பின்னரான உலகப் பொருளாதாரம் செங்குத்தாக மந்தநிலையை நோக்கிச் செல்வதாக உலக வங்கி கடந்த வியாழக்கிழமை கூறி இருந்தது.
உலகின் மூன்று மிகப்பெரிய பொருளதாரமான அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய பிராந்திய பொருளாதாரம் வேகமாக மெதுவடைந்து வருவது ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது என்று உலக வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
‘இந்த சூழ்நிலையில், அடுத்த ஆண்டில் உலகப் பொருளாதாரத்தில் ஒரு மிதமான தாக்கம் ஏற்பட்டாலும் அது மந்தநிலைக்கு வழிவகுக்கும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மத்திய வங்கிகள் தமது செயற்பாடுகளை ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளும்படியும் தேவையான கட்டுப்பாடுகளின் வேகத்தை குறைப்பதற்கு கொள்கை முடிவுகளை தெளிவாக வெளிப்படுத்தும்படியும் உலக வங்கி அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் பணவீக்கத்தால் பொருட்கள் விலை கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னரான கேள்வி அதிகரிப்பு மற்றும் உக்ரைன் போரினால் ஏற்பட்ட எரிபொருள், வலுசக்தி மற்றும் உணவு விலைகளின் அதிகரிப்பு இந்த நிலைக்கு காரணமாகியுள்ளது.
இதனை சமாளிக்கும் வகையில் மத்திய வங்கிகளின் கொள்கை வகுப்பாளர்கள் குடும்பங்கள் மற்றும் வர்த்தகங்களில் இருந்து கேள்வியை குறைப்பதற்கு வட்டி வீதத்தை அதிகரிக்க தீர்மானித்தனர்.
எவ்வாறாயினும் இவ்வாறு அதிக அளவில் வட்டி வீதம் உயர்த்தப்படுவது பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான அச்சுறுத்தலை உருவாக்குவதோடு பொருளாதாரம் மெதுவடைவதற்கும் காரணமாகிறது.










