வெளிநாடுகளிலிருந்து வரும் புலம்பெயர் இலங்கையர்களைக் கைது செய்யக்கூடாது!

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்துவரும் புலம்பெயர் இலங்கையர்களைக் கைது செய்யக்கூடாது என அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

அத்துடன், இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்ட ஏதிலிக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவிக்ககூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளுக்குத் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் உறுதியுரையேற்பு நிகழ்வு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்மீது புலம்பெயர்வாழ் தமிழ் மக்களுக்கும் நம்பிக்கை உள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சிகாலத்தில் இந்நாடு கட்டியெழுப்படாவிட்டால் இலங்கைக்கு விமோசனம் கிடையாது எனவும் கருதுகின்றனர். இலங்கைக்கு அதிகளவு முதலீடுகளை கொண்டுவருவதற்கு கனடாவாழ் முதலீட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இவ்வாறு புலம்பெயர் தமிழர்கள் நாட்டுக்காக நேசக்கரம் நீட்டினாலும் ஒரு சிலரின் நடவடிக்கையால் அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன.

இந்தியாவில் வருகை தந்திருந்த ஏதிலி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்தியாவில் இருந்து வருபவர்களை அநுர அரசாங்கம் கைது செய்கின்றது என சிலர் தகவல்களை பரப்பிவருகின்றனர்.

அரசாங்கம் அவ்வாறு கைது செய்யவில்லை. இது விடயத்தில் உடன் தலையிட்டுள்ளது. இதற்கமைய இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கைது செய்யக்கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவருக்கு பிணை வழங்குவதற்கு மறுப்பு தெரிவிக்ககூடாது என்ற ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது.
எனினும், தீய குணம் படைத்த – தீய நோக்கத்துடன் செயற்படும் அரசியல் சக்திகள் உள்ளன. அந்த தீய சக்திகளை சுத்தப்படுத்த வேண்டும்.”- என்றார்.

Related Articles

Latest Articles