மலையக மக்களை வெறும் தோட்டத் தொழிலாளர்களாக மட்டுமே பார்க்காமல், காணி உரிமையைக் கொண்ட ‘தேயிலை தொழில்முனைவோராக’ (Entrepreneurs) ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பலப்படுத்துவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பலங்கொடையில் உள்ள ‘சன்சிட்டி’ ஹோட்டலில் நேற்று (26) நடைபெற்ற ‘ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின்’ வருடாந்த மாநாட்டில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இம்மாநாட்டை பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா ஏற்பாடு செய்திருந்தார்.
இம்மாநாட்டில் உரையாற்றிய சஜித் பிரேமதாச கூறியவை வருமாறு ,
காணி உரிமை மற்றும் தொழில்முனைவோர் உருவாக்கம்:
நாட்டின் தேயிலைக் காணிகளில் 60% பெருந்தோட்ட நிறுவனங்களிடம் உள்ளபோதிலும், அவர்கள் 30% தேயிலையையே உற்பத்தி செய்கின்றனர். ஆனால், 40% காணிகளை மட்டுமே வைத்துள்ள சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் 70% உற்பத்தியைப் பெற்றுத் தருகின்றனர்.
எனவே, சம்பளத்தை உயர்த்துவது மட்டுமே தீர்வாகாது; அரச மற்றும் தனியார் தோட்டங்களிலுள்ள பயனற்ற தரிசு நிலங்களை மலையக மக்களுக்குப் பிரித்து வழங்கி, அவர்களைச் சொந்த வீடுகளுடன் கூடிய ‘சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக’ மாற்றுவதற்குக் ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது.
கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டிற்குத் தனிக் கட்டமைப்பு:
மலையகப் பகுதி பாடசாலைகளில் நிலவும் வளப் பற்றாக்குறைகள் மற்றும் சுகாதாரத் துறை குறைபாடுகளை ஒருங்கிணைத்துத் தீர்ப்பதற்காகப் பிரத்யேக ‘ஜனாதிபதி செயலணி’ ஒன்று உருவாக்கப்படும்.
தோட்டத் தொழிலாளர்கள் வெளியேற்றத்திற்கு எதிர்ப்பு
தோட்டத் தொழிலாளர்களுக்கு நீதியை வழங்குவதாகக் கூறும் தற்போதைய அரசாங்கம், 1979-ஆம் ஆண்டின் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களைத் தோட்டங்களை விட்டு வெளியேற்றி வருகிறது. 1889-ஆம் ஆண்டின் 13-ஆம் இலக்க இந்தியத் தோட்டத் தொழிலாளர் கட்டளைச் சட்டத்தின் 24(1) பிரிவின்படி இந்த வீடுகள் அவர்களுக்கு உரியவை.
சட்டவிரோதமாக மக்களை வெளியேற்றுவதைத் தடுக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகச் சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பிரத்தியேகச் சட்டத்தரணிகள் குழுவொன்று நியமிக்கப்படும்.” – என்றார் சஜித்










