நாள் சம்பளமாக 1000 ரூபாவை பெறுவதற்கு முழு நாளும் தோட்டத்தில் வேலை செய்ய வேண்டிய நிலைமை எமது பெருந்தோட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
பொகவந்தலாவையில் மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார். மேலும் எமது உடன் பிறப்புகளான எமது தொழிலாளர்கள் தினமும் பெரும் போராட்டத்தின் மத்தியில் அவர்களின் வாழ்க்கையை கொண்டு செல்கின்றனர்.
தினமும் உணவு, பிள்ளைகளின் கல்வி, மருத்துவம் என பெரும் செலவுகளை ஈடுகட்ட முடியாது பெரும் சிரமத்தின் மத்தியில் வாழ்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
ஊடகங்களில் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும் இங்கு உள்ள வியாபார நிலையங்களில் பொருட்களின் விலைகள் அதிகளவில் காணப்படுகின்றது. விலை குறைக்கப்பட்டது சதோச வில் மட்டுமே என்று தெரிவிக்கப்படுகின்றது, இந்நிலையில் விலை குறைக்கப்பட்ட பொருட்களை பெற்றுக் கொள்ள முடியாத மக்களாகவே நாம் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
ரூபா 1500 விற்கு காணப்பட்ட கேஸ் விலையை ரூபா 5000 த்திற்கு உயர்த்தி மீண்டும் ரூபா 1000 குறைப்பதில் எவ்வித பிரயோசனமும் இல்லை எமது மக்களால் அந்த கேஸை பெற்றுக் கொள்ள முடியாத நிலையிலேயே உள்ளனர் என்றும் தெரிவித்தார்.










