கணவருடன் சண்டை – 3 வயது மகளுடன் கிணற்றில் பாய்ந்து தாயும் தற்கொலை!

கணவனுக்கும், மனைவிக்குமிடையே இடம்பெற்று வந்த வாய்த்தர்க்கம் முற்றவே, மனமுடைந்த மனைவி தனது மூன்று வயது மகளையும் தூக்கிக்கொண்டு கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட துக்ககரமான சம்பவமொன்று பிபிலையில் இடம்பெற்றுள்ளது.

பிபிலைப்பகுதியைச் சேர்ந்த நெல்லிவத்தை கிராமத்தின் 24 வயது நிரம்பிய நதீகா பிரியங்கிகாவும்,  அவரது மூன்று வயது நிரம்பிய கேஷா தேவமி ஆகிய இருவருமே மரணமானவர்களாவார்.

இவ்விரு மரணங்களும் 23.02.2021ல் நெல்லிவத்தை கிராமக் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டன.

பிபிலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.கே. செனரத் தலைமையிலான குழுவினர்,  மேற்படி மரணங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டபோது,  தற்கொலை செய்து கொண்ட இருவருக்கு பாதுகாப்பாக இருந்த அயல்வீட்டுப் பெண் சாட்சியமளித்தார். இறந்த மனைவியின் கணவன் இராணுவத்தைச் சேர்ந்தவர்.

அவருக்கும்,  இறந்த பெண்ணிற்குமிடையே அடிக்கடி வாய்த்தர்க்கங்கள் ஏற்பட்டு வருவதுண்டு. சம்பவதினமிரவும் இருவருக்குமிடையே கையடக்க தொலைபேசி ஊடாக கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்ததை,  இறந்த பெண் பேசிய தொனியிலிருந்து அறிய முடிந்தது.

இதையடுத்து,  அப் பெண் அழுது கொண்டே தனது குழந்தையையுப் தூக்கிக்கொண்டு சென்றார். மறுதினம் அவ்விருவரும் சடலங்களாகவே மீட்கப்பட்டனரென்று கூறினார்.

இம் மரணங்கள் குறித்து பொலிசார் தொடர்ந்தும் தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எம். செல்வராஜா பதுளை

Paid Ad