போதைப்பொருள் வர்த்தகம், விநியோகம் என்பவற்றை முன்னெடுத்த போதைப்பொருள் மத்திய நிலையம் ஒன்று கம்பளை பொலிஸாரால் நேற்று (15) காலை சுற்றிவளைக்கப்பட்டதுடன் 8 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
31 வயதான ஹோட்டல் உரிமையாளரும் போதைப்பொருள் வாங்க வந்திருந்த 21 தொடக்கம் 42 வயதுக்கு இடைப்பட்ட 7 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
எவருக்கும் இலகுவில் சந்தேகம் ஏற்படாத வகையில் ஹோட்டல் ஒன்று போல குறித்த இடம் நடத்திச் செல்லப்பட்டதாகவும் இந்த இடத்துக்கு பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டவர்கள் அதிகமாக வந்து செல்கின்றமை தொடர்பில் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்புக்கு அமைய கம்பளை ஊழல், ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஹோட்டலின் மேல் மாடியில் உள்ள 3 அறைகளில் போதைப்பொருள் வர்த்தகம் முன்னெடுக்கப்பட்டு செல்லப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன் நகரை அண்மித்த பகுதிகளைக் கண்காணிப்பதற்காக பல இரகசிய ஜன்னல்களும் அமைக்கப்பட்டிருந்துள்ளது.
இதனையடுத்து அந்த ஹோட்டல் சுற்றிவளைக்கப்பட்டதுடன் இதன்போது பல்வேறு வகையான போதைப் பொருள்கள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதுடன் பெருந் தொகைப் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
