சமூகத்தொற்றைத் தடுக்கவே புதிய வர்த்தமானி வெளியீடு!

” நாட்டை முழுமையாக முடக்காததால் கொரோனா வைரஸ் இலகுவில் பரவக்கூடும். எனவே, பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றி முழு ஒத்துழைப்பை வழங்கும்பட்சத்திலேயே சமுகத்தொற்றை தடுக்கமுடியும். அதற்காகவே புதிய வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.” – என்று சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” விஞ்ஞானப்பூர்வமாக 4 கட்டங்களாகவே இந்நோய் பரவல் கணிக்கப்படுகின்றது.நோயாளி எவரும் இல்லை என்பது முதல் கட்டமாகும், ஆங்காங்கே நோயாளிகள் அடையாளம் காணப்படுதல் மற்றும் அவர்களின் தொடர்புகளை கண்டுபிடிக்ககூடியதாக இருக்கும் நிலையே 2 ஆம் கட்டமாகும்.

தற்போது ஏற்பட்டுள்ள கொத்தணி பரவல்களே மூன்றாம்கட்ட அலையாக கருதப்படுகின்றது. சமூகத்தில் வகைதொகையின்றி எல்லா இடங்களிலும் நோயாளிகள் அடையாளம் காணப்படுதல், எங்கிருந்து எப்படி அவர்களுக்கு தொற்று பரவியது என்பதை கண்டுபிடிக்கமுடியாத நிலை நான்காம் கட்டம் அதாவது சமூகதொற்றாகும். அந்த நிலைக்கு எமது நாடு இன்னும் செல்லவில்லை.

எனினும், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படாததால், மக்கள் சுகாதார பாதுகாப்புடன் செயற்படதவறும் பட்சத்தில் வைரஸ் பரவக்கூடிய அபாயம் இருக்கின்றது. எனவேதான் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும் என வலியுறுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டபோது நாடு முழுவதும் இரண்டு மாதங்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தி அதனைக்கட்டுப்படுத்தினோம். கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு இது இலகுவான வழிமுறை என்றபோதிலும் மீண்டும் அவ்வாறானதொரு கட்டத்துக்குசெல்லமுடியாது. ஏனெனில் பொருளாதாரம் முடக்கப்படும் என்பதுடன் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படும்.

எனவேதான் வீண் பயணங்களைக் கட்டுப்படுத்தி மக்கள் வீட்டுக்குள் இருக்கவேண்டும், அத்தியாவசிய தேவைக்கு பொதுவெளிக்கு செல்லும்போது சமூகஇடைவெளி, முகக்கவசனம் அணிதல் வந்த பின்னர் கைகளை கழுவுதல் போன்ற சுகாதார நடைமுறைகளை பின்பற்றவேண்டும். அப்போதுதான் இதனை கட்டுப்படுத்தமுடியும். சுகாதார பழக்கவழக்கங்களை பழகிக்கொண்டால் மாத்திரமே வைரஸ் தொற்றிலிருந்து தப்பமுடியும்.

அதேவேளை, நாளாந்த பீசீஆர் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன, 21 வைத்தியசாலைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றது.” – என்றார்.

Paid Ad