சொல்லிசைப் பாடகர் சங்கீதன் அரசின் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரை விடுவிக்கக் கோரியும் இன்று சனிக்கிழமை கிளிநொச்சி மாவட்ட பழைய கச்சேரிக்கு முன்பாக மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் மக்களின் அவலங்களையும், தியாகங்களையும், வீரத்தையும், வாழ்வியலையும் தனது சொல்லிசை மூலம் பாடலாகப் பாடி வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த சங்கீதன் என்ற இளைஞர் சாவகச்சேரி பொலிஸாரால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை ஒட்டுமொத்த தமிழ்ப் படைப்பாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தாயகக் கலைஞனை விடுவிக்கக் கோரி, மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் இன்று காலை கிளிநொச்சி மாவட்ட பழைய கச்சேரி முன்பாகப் பெரும் திரளான இளைஞர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
“குரல்வளையின் விலங்குடைக்க அணிதிரள்வோம்” என்னும் பொருண்மையில், கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரியும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஊடாகத் தமிழர்கள் மீது நிகழ்த்தப்படும் இன அடக்குமுறைகளைக் கண்டித்தும், கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத்தால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் கலந்துகொண்டவர்கள், “பாடினால் பயங்கரவாதமா? தாயகக் கலைஞனை உடனே விடுவி!”, “தமிழர் வலிகளைப் பாடுவதும் எழுதுவதும் குற்றமா?”, “ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் பயங்கரவாதச் சட்டத்தை உடனே நீக்கு!”, “சட்டத்தின் பெயரால் நடக்கும் அரச பயங்கரவாதத்தை உடனே நிறுத்து!”, “உரிமைக்குரல் எழுப்பத் தமிழருக்குத் தடையா? ஜனநாயகம் எங்கே?”, “உடைப்போம் உடைப்போம்! குரல்வளையின் விலங்கை உடைப்போம்! ” போன்ற முழக்கங்கள் அடங்கிய வாசக அட்டைகளை ஏந்தியவாறும், உணர்ச்சிப் பூர்வமாக முழக்கங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர் சமூகம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.










