ட்ரம்ப்மீது துப்பாக்கிச்சூடு: சஜித்தின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கோரிக்கை

அமெரிக்காவில் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன கூறியவை வருமாறு,

“ அமெரிக்காவில் எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பை கொலை செய்யும்நோக்கில் அவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இது ஜனநாயகத்துக்கு விழுந்த அடியாகும். அரசியலில் வன்முறை இருக்ககூடாது.

இலங்கையிலும் சில கட்சிகள் தமது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியாதுபோனால், வன்முறையில் ஈடுபடும் சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளன. வேட்பாளர்கள்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனவே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும். இது தொடர்பில் அரசுக்கு பொறுப்பு உள்ளது.
இலங்கை ஜனநாயக நாடாகும். ஆயுதங்கள் மூலம் அல்ல ஜனநாயக வழியிலேயே நாம் அரசியல் செய்கின்றோம். தேர்தல்மூலமே மாற்றங்கள் இடம்பெறவேண்டும். சஜித்தின் பாதுகாப்பு தொடர்பில் துளியளவும் அச்சம் இருக்ககூடாது, அவருக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles