தலவாக்கலை நகரில் அமைந்துள்ள கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பாதுகாப்பு கமரா கட்டமைப்புகளை விற்பனை செய்து பொருத்தும் வர்த்தக நிலையம் ஒன்றில், ஐந்து இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 25ஆம் திகதி இரவு குறித்த வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அங்கிருந்த கையடக்கத் தொலைபேசிகள், பணம் மற்றும் தங்க மோதிரம் ஒன்றைத் திருடிச் சென்றுள்ளதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு திருடப்பட்ட பொருட்கள் மற்றும் பணத்தின் மொத்தப் பெறுமதி ஐந்து இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நபர் வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்து திருட்டில் ஈடுபடும் காட்சிகள், அங்கு பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமரா கட்டமைப்பில் தெளிவாகப் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், திருட்டில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.










