இலங்கையின் அரசியல் மற்றும் சமூகக் கலாசாரத்துடன் சூனியங்கள் போன்ற மூடநம்பிக்கைகள் பிணைக்கப்பட்டிருந்த போதிலும், நாட்டுக்குத் தீங்கு விளைவித்த நபர்களுக்கு எதிராகச் சட்டம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதே மிகவும் முக்கியமானது என்று கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் சூனியங்கள் தொடர்பில் பரவி வரும் கருத்துக்கள் குறித்து, நேற்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய பிரதி அமைச்சர்,
“இலங்கைச் சமூகத்தில் இவ்வாறான மூடநம்பிக்கைகள் நிலவிய போதிலும், நாட்டுக்குத் தீங்கு விளைவித்தவர்களுக்கு எதிராகச் சட்டம் மூலம் நீதி நிலைநாட்டப்படும் என்பது குறித்து மக்களுக்குத் தெளிவான நம்பிக்கை இருக்கின்றது.
இந்த நாட்டுக்கும், நாட்டின் மதத்துக்கும் மற்றும் மக்களுக்கும் தீங்கு விளைவித்தவர்களுக்கு எதிராகச் சட்டம் வலுவாகவும் விரைவாகவும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதற்காக யாராவது பிரார்த்தனை செய்தால், அவர்களின் அந்த நோக்கம் குறித்து எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.” – என்றார்.
அரசியல் மற்றும் மத நம்பிக்கைகளைப் தவறாகப் பயன்படுத்துவது குறித்துச் சுட்டிக்காட்டிய அவர்,
“அரசியல் அதிகாரம் மற்றும் மத நம்பிக்கையைப் பயன்படுத்தி மக்களைத் தவறாக வழிநடத்துவது அல்லது தகாத நன்மைகளைப் பெறுவது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆன்மீகச் செயல்பாடுகளில் ஈடுபடுவதால் மட்டும் ஒருவரது தவறான செயல்களை மறைத்துவிட முடியாது.
ஊழல் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள நபர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்போது, அது தொடர்பான விசாரணைகளைச் சுயாதீனமாக மேற்கொண்டு, சான்றுகளின் அடிப்படையில் சட்டத்தைச் செயல்படுத்துவது அத்தியாவசியமானது.” – என்றார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
“சூனியத்தினால் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று யாராவது நம்பினால், அந்தச் சக்தியின் மூலமாவது தொடர்புடைய வழக்கு நடவடிக்கைகள் வெற்றியடைந்து, விசாரணைகள் விரைவுபடுத்தப்பட்டு, கண்டறிய முடியாத சான்றுகளைக் கண்டறிய முடியுமாகட்டும் என நான் பிரார்த்திக்கின்றேன்.
ஆனால், இறுதியாக நாட்டுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டியது சட்டத்தின் செயற்பாட்டின் மூலமே ஆகும். நாட்டின் வளங்களை அழித்த, மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைத்த மற்றும் மத விழுமியங்களை அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்திய நபர்களுக்கு எதிராக நீதி நிலைநாட்டப்படச் சட்டத்தின் ஆட்சி பலப்படுத்தப்படுவது அவசியமானது.” – என்றார்.










