தேர்தல் ஒன்றினை நடத்த இயலாது என்றால் தேர்தல் ஆணைக்குழுவொன்று இருப்பதில் எந்த பிரயோசனமும் இல்லையென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
மும்மொழியப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் தீர்மானங்களை முறைப்படுத்துவதற்காகவும் மக்கள் மயப்படுத்துவதற்காகவும் தேர்தல் ஆணைக்குழுவினால் அநுராதபுரம் ரந்திய ஹோட்டலில் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரை நிகழ்த்துகையில், தேர்தலை நடாத்துவதற்கு நிதி இல்லையென்பது எங்களுக்கு பிரச்சினை இல்லை. அந்த விடயத்தினை அரசாங்கம் பார்த்துக்கொள்ளும். அடுத்த வருடம் மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்தவேண்டும். தேர்தல் ஆணைக்குழு என்ற வகையில் அதற்கான செயல்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
மக்கள் பிரதிநிதிகளால் நிர்வகிக்கக்கூடிய மாகாண சபைகளை அதிகாரிகள் ஊடாக நிருவகிப்பது குறித்து தேர்தல் ஆணைக்குழு எங்கும் உடன்படாது. மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தேர்தல் ஆணைக்குழு தொடர்ந்தும் இருக்கின்றது. இலங்கை பிரஜை அல்லாத ஒருவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்கின்றார் என்றாலும் கூட தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் சட்டங்களின் பிரகாரம் அவரை நிராகரிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இல்லை. அதற்கான தீர்மானத்தினை பெற்றுக்கொள்ள உயர்நீதிமன்றத்தினை நாடவேண்டிய நிலை காணப்படுகின்றது. ஆகவேதான், தேர்தல் சட்டங்களில் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கின்றன. வேட்புமனு தாக்கல் செய்யும் போது கட்சியினது செயலாளருடைய கையொப்பம் அல்லது சமாதான நீதவானுடைய உறுதிப்படுத்தல் இல்லை என்ற விடயங்கள் உள்ளிட்ட தொழினுட்ப கோளாறு காரணமாக வேட்புமனுவினை நிராகரிக்கும் விடயங்களுக்கு குறுகிய நேரத்துக்குள் திருத்தங்களை மேற்கொண்டு மீண்டும் வேட்புமனுவினை வழங்கும் விதத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஆணைக்குழு யோசனைகளை முன்வைத்துள்ளது. வேட்பாளர்களை பொதுமக்கள் தான் நிராகரிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா மேலும் தெரிவித்தார்.










