நுவரெலியா நகரத்தின் எழிலுக்கு பங்கம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் அங்கு நான்கு மாடிகளுக்கு மேல் கட்டட நிர்மாணங்களை மேற்கொள்வதை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்கான யோசனையை முன் வைத்துள்ளதுடன் அந்த யோசனையை உள்ளடக்கிய அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்கவும் தீர்மானித்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது நுவரெலியா மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் அதிகாரிகள் உள்ளடங்கிய முக்கிய நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. அந்த நிகழ்வின் போதே ஜனாதிபதி இந்த யோசனையை முன் வைத்ததுடன் அது தொடர்பான பணிப்புரைகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.
அதேவேளை, நுவரெலியா நகரில் உயரமான கட்டடங்களை நிர்மாணிப்பதற்கான அனுமதியை வழங்கியமை தொடர்பில் அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேள்வி யெழுப்பியுள்ளதுடன் ‘லிட்டில் இங்லேண்ட்’ என அழைக்கப்பட்டு வரும் நுவரெலியா நகரம் இதன் காரணமாக அதன் வரலாற்று எழில் தோற்றத்தை இழந்து விட்டது என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டி யுள்ளார்.
