பதுளை பெண்ணின் மரணம் குறித்து உண்மை கண்டறியப்பட வேண்டும் – ராதா

அரசின் நிவாரண வேலைத்திட்டத்தில் மலையக மக்கள் உள்வாகங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இது தொடர்பாக உலக வங்கி பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதும் தெரிவித்திருக்கிறோம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிதி ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் நிவாரணப்பணி வேலைத்திட்டத்தில் மலையக மக்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். உலக வங்கியின் உதவியுடனே இதனை முன்னெடுக்க இருக்கிறது. அதனால் உலக வங்கி பிரிதிநிகளுடனும் இது தொடர்பாக கலந்துரையாடி இருக்கிறோம். நாடு வங்குரோத்து அடைந்திருக்கும் நிலையில் பின்தங்கிய மக்களுக்கு உதவி செய்யும் நோக்கிலே இதனை அரசாங்கம் செய்ய முற்பட்டிருக்கிறது. அதனால் பின்தங்கிய மக்கள் என்நவகையில் மலையக மக்களை இதில் புறக்கணித்துவிடக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன் வரி அதிகரிக்கப்பட்டிருக்கிறது. வசதி உள்ளவர்களிடமிருந்து அதிக வரியை பெற்று ஏழை மக்களுக்கு வழங்குவதன் மூலம் அரசாங்கம் இதனை சமநிலைக்கு கொண்டுவர முடியும். அதேநேரம் வியாபார நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் பதுளையை சேர்ந்த பெண்ணின் மரணம் தொடர்பாக பலரும் பேசிவருகின்றனர். அதனால் அந்த மரணம் கொலையா தற்கொலையா என முறையாக விசாரணை நடத்துவதுடன் இந்த விடயத்தில் பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றார்.

Related Articles

Latest Articles