சிரேஷ்ட பேராசிரியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பேராதனை பல்கலைக்கழகத்தில் 12 மாணவர்களுக்கு வகுப்புத்தடை செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களின் மாணவர் அந்தஸ்து இரத்து செய்யப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர், சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை தாக்கிய சம்பவம் மற்றும் உத்தியோகபூர்வ இல்லத்தை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகளை ஆரம்பித்ததன் மூலம் 12 மாணவர்களின் மாணவர் அந்தஸ்து இரத்து செய்யப்பட்டுள்ளது என பேராதனை பல்கலைக்கழகத்தின் ஊடகப் பேச்சாளரும், பிரதி உபவேந்தருமான, பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.
இந்த 12 மாணவர்களும் கண்காணிப்பு கமரா அமைப்பை அவதானித்ததன் பின்னர் அடையாளம் காணப்பட்டதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை இந்த மாணவர்களின் மாணவ அந்தஸ்தை இரத்து செய்யும் தீர்மானம் அமுலில் இருக்கும் எனவும் பிரதி உபவேந்தர் மேலும் குறிப்பிட்டார்.
அதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் பொலிஸில் சரணடைந்த நிலையில் ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
