மடூல்சீமையில் கொலை செய்யப்பட்டு பள்ளத்தாக்கில் வீசப்பட்ட இளைஞனின் சடலம் மீட்பு!
மடூல்சீமை, எலமான் சிறிய உலக முடிவு பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் 23 வயதுடைய இளைஞரை கொலை செய்து வீசிய இரு சந்தேக நபர்களும், பசறை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்டனர். இதன்போது சந்தேக நபர்களை எதிர்வரும் 25 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை, மலை உச்சியில் இருந்து சுமார் 400 அடி பள்ளத்தில் குறித்த இளைஞனின் சடலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஹாலிஎல, ரொஸட் கீழ் பிரிவைச் சேர்ந்த சுஜீவன் என்ற இளைஞன் கடந்த 30 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்தார்.
இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவந்த விசாரணையில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காணாமல்போன இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்தது.
இந்நிலையில் சடலத்தை தேடும் பணி கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்த நிலையிலேயே இன்று மீட்கப்பட்டுள்ளது. பிரதேச மக்கள், இராணுவத்தினர், பொலிஸார், விசேட பயிற்சி பெற்ற இராணுவ படைப்பிரிவினர் இணைந்தே தேடுதலில் ஈடுபட்டனர்.
ராமு தனராஜா