மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட வலி சுமந்த நாள் இன்று: 78 ஆண்டுகள் கடந்தும் நீதிக்காக தொடரும் போராட்டம்

மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு இன்றுடன் 78 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவர்களுக்கு ஏற்பட்ட வரலாற்று அநீதிகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு மற்றும் நாடு கடத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் அம்மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுவதற்காக விசேட விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு நீண்டகாலமாகப் பங்களிப்பு வழங்கி வரும் மலையகத் தமிழர்கள், குடியுரிமை பறிக்கப்பட்டதன் பின்னரும் அரசியல், சமூக மற்றும் பொருளாதார உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக இன்றளவும் போராடி வருகின்றனர்.

குடியுரிமை மறுப்பு மற்றும் நாடு கடத்தல் நடவடிக்கைகள் மலையக மக்களின் வாழ்வாதாரம், அரசியல் பிரதிநிதித்துவம், கல்வி மற்றும் சமூக முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், மலையக மக்களுக்கு இனியும் அனுதாபம் தெரிவிப்பது மட்டும் தீர்வாகாது எனவும், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதியும் உரிமைகளுமே அவசியம் எனவும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, மலையக மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான காணி உரிமையைத் தாமதமின்றி வழங்குவதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

200 ஆண்டுகளாகத் தொடரும் உரிமைப் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, மலையகத் தமிழர்களுக்கு சம உரிமை, கண்ணியம் மற்றும் நீதியை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related Articles

Latest Articles